

சென்னை,
தீபிகா படுகோனே நடித்த பத்மாவத் படத்தை எதிர்த்து வட மாநிலங்களில் கலவரம் வெடித்தது. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. வாகனங்கள் எரிக்கப்பட்டன. வன்முறையின் உச்சமாக குர்கானில் ஜிடி கோயங்கா பள்ளியின் பேருந்து மீது நேற்று கர்னி சேனா குண்டர்கள் தாக்குதலை நடத்தி உள்ளனர். 5 வயது குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து மீது குண்டர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பள்ளி குழந்தைகள் உடனடியாக கீழே அமர்ந்து அழும் காட்சிகள் வெளியாகியது. அவர்களை ஆசிரியைகள் சமாதானம் செய்தனர்.
பஸ் வேகமாக இயக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பஸ்சின் கண்ணாடி ஜன்னல்கள் விழும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்று உள்ளது. குழந்தைகள் பயந்து அழும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்று உள்ளது. இச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களுடன் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு காரணமாக பள்ளியின் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பல்வேறு தரப்பில் அரசுக்களின் மவுனம் மற்றும் நடவடிக்கையின்மை தொடர்பாக கேள்வி எழுப்பட்டு வருகிறது.
பத்மாவத் படத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பள்ளி குழந்தைகள் மீதான தாக்குதலுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், பத்மாவத் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா மாநிலம் குருகிராமில் போராட்டக்காரர்கள் என்ற போலியான போர்வையில் பள்ளி குழந்தைகள் சென்ற வாகனம் மீது குண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியிருப்பது கவலையளிக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பா.ஜ.க. அரசு சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் இதுபோன்ற செயல்களை கண்டும் காணாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆகவே, உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு வன்முறையாளர்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறிஉள்ளார்.