

சண்டிகார்,
ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் தயாராகி உள்ள பத்மாவதி திரைப்படத்தை அடுத்த மாதம் 1ந் தேதி திரைக்கு கொண்டுவர முடிவு செய்து அதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு இருந்தனர். இந்த படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்று பா.ஜனதா, ராஜபுத்ர சேனா, கர்னி சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் இருந்து மானத்தை காப்பாற்ற 12 ஆயிரம் பெண்களுடன் தீயில் இறங்கி உயிர் நீத்தவர் ராணி பத்மினி.ஆனால் பத்மாவதி படத்தில் அலாவுதீன் கில்ஜியை, ராணி பத்மினி காதலிப்பதுபோல் தவறாக காட்சிப்படுத்தி உள்ளனர் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
இப்படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் என்றும், அவரது தலையையோ அல்லது படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இதையடுத்து தீபிகா படுகோனேவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவரது வீட்டிலும் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். ராஜஸ்தான், உத்தரபிரதேச அரசுக்களும் எதிர்ப்பு தெரிவித்தது, இதனையடுத்து பத்மாவதி திரைப்படம் வெளியிடும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
வரலாற்று உண்மைகள் அழிக்கப்பட்டால் பத்மாவதி திரைப்படத்தை மத்திய பிரதேச மாநிலத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து இருந்தார். இதைப்பின்பற்றி, பஞ்சாப் மாநில அரசும் பத்மாவதி திரைப்படத்துக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்திக்கு தேசிய மநாட்டு கட்சி தலைவர் கடிதம் எழுதியுள்ளார். படத்தின் கதையை ஆராயும் வரை படம் வெளியிட அனுமதி அளிக்க கூடாது என்று தேசிய மாநாட்டு கட்சி, முதல் மந்திரி மெகபூபா முப்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.