

ஜெய்பூர்,
சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் பத்மாவதி என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது.
நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ளார். பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் என்பவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார். கவிஞர் மாரிக் முகமது ஜெயாசி எழுதிய கவிதையை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஷாகித் கபூர் ராணி பத்மினியின் கணவர் ராவல் ரத்தன் சிங்காகவும் டெல்லியை ஆண்ட சுல்தான் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். வருகிற டிசம்பர் 1-ந்தேதி பத்மாவதி படம் திரைக்கு வருகிறது.
இதற்கிடையே பத்மாவதி படத்துக்கு ரஜபுத்தர மன்னர்களின் வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குஜராத்தில் சட்ட சபை தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்மாவதி படம் வெளியானால் குறிப்பிட்ட பிரிவினர் இடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பா.ஜனதா இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பத்மாவதி படத்தை திரையிட தடை விதிக்க கோரி தேர்தல் கமிஷனுக்கு பா.ஜனதா கடிதம் எழுதியது. படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் ராஜ புத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
படத்தை தடைசெய்யும்படி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் இருந்து மானத்தை காப்பாற்ற 12 ஆயிரம் பெண்களுடன் தீயில் இறங்கி உயிர் நீத்தவர் ராணி பத்மினி.
ஆனால் பத்மாவதி படத்தில் அலாவுதீன் கில்ஜியை ராணி பத்மினி காதலிப்பதுபோல் தவறாக காட்சிபடுத்தி உள்ளனர் என்று அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்த படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் என்றும் அவரது தலையையோ அல்லது படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பஞ்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்து உள்ளனர். இதனால் இந்தி பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தீபிகா படுகோனேவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவரது வீட்டிலும் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் பத்மாவதி படத்தை திரையிட ராஜஸ்தான், உத்தர பிரதேச அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
பத்மாவதி திரைப்பட விவகாரத்தில் இப்போது தன்னை இணைத்துக் கொண்டு உள்ள ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா, படத்தில் மாற்றம் செய்யப்பட்ட பின்னர்தான் வெளியிட அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு வசுந்தரா ராஜே சிந்தியா எழுதி உள்ள கடிதத்தில் பத்மாவதி படத்தை வெளியிடுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே தேவையான திருத்தங்கள் செய்வதுவரை பத்மாவதி படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது. எந்த ஒரு சமூகத்தின் நம்பிக்கைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் திரைப்படங்கள் இருக்க கூடாது என கூறிஉள்ளார். சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என உத்தரபிரதேச அரசும் பத்மாவதி படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
சித்தோர்கர் கோட்டையிலும் போராட்டக்காரர்கள் அரண் அமைத்தும் போராட்டம் நடத்தினர். வரலாற்று உண்மைகளை திரித்துள்ளதாக பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.