பஹல்காம் தாக்குதல்; பெண்களுக்கு போர்க்குணம் இல்லை - பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு

பயங்கரவாதிகளை எதிர்த்து போராடியிருந்தால், உயிரிழப்புகள் குறைவாக இருந்திருக்கும் என பா.ஜ.க. எம்.பி. ராம் சந்தர் ஜங்ரா கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதல்; பெண்களுக்கு போர்க்குணம் இல்லை - பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு
Published on

சண்டிகர்,

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது.

இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. எல்லையில் 4 நாட்களுக்கு இருநாட்டு படைகளுக்கு இடையே மோதல் நீடித்தது. பின்னர் மோதல் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தது. இருப்பினும் 'ஆபரேஷன் சிந்தூர்' தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில், பஹல்காமில் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்கு போர்க்குணம் என பா.ஜ.க. எம்.பி. ராம் சந்தர் ஜங்ரா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவின் பிவானி பகுதியில் மராட்டிய ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த நாளில் விழா கொண்டாடப்பட்டது.

அப்போது பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய அவர், "நமது மக்கள் தங்கள் கைகளை கட்டிக்கொண்டு உயிரை இழந்திருக்கிறார்கள். சுற்றுலா பயணிகள் ஒருவேளை அக்னிவீர் பயிற்சி பெற்றிருந்தால், வெறும் 3 பயங்கரவாதிகளால் 26 பேரை கொன்றிருக்க முடியாது. பயங்கரவாதிகளை எதிர்த்து அவர்கள் போராடியிருக்க வேண்டும்.

எதிர்த்து போராடியிருந்தால், உயிரிழப்புகள் குறைவாக இருந்திருக்கும். பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களிடம் போர்க்குணம், துணிச்சல் மற்றும் வைராக்கியம் இல்லை. எனவே, அவர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்" என்று தெரிவித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்கள் அவரிடம், "பயங்கரவாதிகளுக்கு எதிராக பெண்கள் எவ்வாறு போராடுவார்கள்?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "அஹில்யாபாய் ஹோல்கர் ஒரு பெண், ராணி லட்சுமிபாயும் அப்படித்தான். அவர்கள் போராடவில்லையா? எங்கள் சகோதரிகள் தைரியமாக வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.

பா.ஜ.க. எம்.பி. சந்தர் ஜங்ரா பேசிய கருத்து பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், கணவரை இழந்த துக்கத்தில் இருக்கும் பெண்களை விமர்சிக்கும் வகையில் உள்ளது என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், "பஹல்காம் தாக்குதல் ஏற்படுவதற்கு காரணமான பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்புவதற்கு பதிலாக, பா.ஜ.க. தலைவர்கள் இந்திய ராணுவத்தையும், உயிர் தியாகம் செய்தவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் தொடர்ந்து அவமதித்து வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.

அதே போல், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், "பா.ஜ.க. ஒரு கட்சி அல்ல, மாறாக பெண்களுக்கு எதிரான மனநிலையின் சதுப்பு நிலம்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார். முன்னதாக இந்திய ராணுவத்தை சேர்ந்த கர்னல் சோபியா குரேஷியை, பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என்று குறிப்பிட்டு மத்திய பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ.க. மந்திரி குன்வார் விஜய் ஷா பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவர் மீது நீதிமன்றமே வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. தனது பேச்சு குறித்து அவர் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com