

இஸ்லமபாத்,
எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் மீறி துப்பாகிச்சூடு நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ள பாகிஸ்தான், இந்திய துணைதூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. தெற்காசியா மற்றும் சார்க் நாடுகளுக்கான பாகிஸ்தானின் பொது இயக்குநர் முகம்மது பைசல் இந்திய துணைத்தூதர் ஜேபி சிங்கை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி இந்திய ராணுவம் கோடிரா செக்டாரில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தானைச்சேர்ந்தவர் ஒருவர் பலியாகிவிட்டதாக பாகிஸ்தான் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. எல்லையில் நிதானத்தை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்ட பிறகும் இந்திய ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தியாக பாகிஸ்தான் ராணுவம் அபாண்டமாக இந்திய ராணுவம் மீது குற்றம் சாட்டியுள்ளது. மேலும், நிகழாண்டு மட்டும் 700 க்கும் மேற்பட்ட முறையில் இந்திய ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பதாகவும் இதில் 29 அப்பாவி பொதுமக்கள் பலியாகி இருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.