

பூன்ச்,
ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் செக்டாரில் உள்ள நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.
முன்னதாக, நவ்ஷ்ரா மற்றும் சுந்தேர்பனி ஆகிய செக்டார்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதையடுத்து, அந்நாட்டு துணைத்தூதரை நேரில் அழைத்து இந்தியா நேற்று கண்டனம் தெரிவித்து இருந்தது. கடந்த ஜனவரி 11-ஆம் தேதி எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஒரு ராணுவ அதிகாரி மற்றும் ஒரு ஜவான் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்.
பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதலுக்கு நமது வன்மையான கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே 2003-ஆம் ஆண்டு போடப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. கடந்த ஆண்டு பாகிஸ்தான் 2,936 முறை எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருந்தது. கடந்த 15 ஆண்டுகளில் 2018-ம் ஆண்டு தான் இவ்வளவு அதிகமாக தாக்குதல் நடைபெற்றது.