

புதுடெல்லி,
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் பெண், சிகிச்சைக்காக இந்தியா வர உதவுமாறு வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்ஜிடம் டுவிட்டர் மூலம் உதவி கோரியுள்ளார். பைசா தன்வீர் என்ற 25 வயது பாகிஸ்தான் பெண் வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். வாய்ப்புற்று நோய்க்காக சிகிச்சை பெற இந்தியாவின் காசியாபாத்தில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனைக்கு வர திட்டமிட்டுள்ளார். தனியார் மருத்துவமனையில் ரூ.10 லட்சத்தை முன்பணமாக செலுத்திவிட்டதாகவும் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
இந்த சூழலில், பைசா தன்வீர் மருத்துவ தேவைக்காக கோரிய விசா இஸ்லமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதட்டமான சூழல் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதாக பைசா தன்வீரின் தாயார் தெரிவித்தார். இதையடுத்து, இந்திய அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச்செல்வதற்காக பைசா தன்வீர் கடந்த சில தினங்களாக டுவிட்டர் மூலமாக சுஷ்மா சுவராஜ் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார். தனது படத்தையும் அந்தப்பெண் வெளியிட்டுள்ளார்.
பைசா தன்வீர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலையிட்டு, தனக்கு சிகிச்சை அளிக்க வகை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். முன்னதாக கடந்த மாதம் சுஷ்மா ஸ்வராஜின் தலையீட்டால், பாகிஸ்தான் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.