ஜின்னாவின் ரகசியத்தை காத்த மும்பை மருத்துவர்கள் 2 பேருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது

இந்த ரகசியம் காக்கப்பட்டதால் மட்டுமே பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது.
பாகிஸ்தான் உயரிய விருது.
ஜின்னா
Published on

மும்பை,

பாகிஸ்தான் நாட்டின் முதல் கவர்னர் ஜெனரல் முகம்மது அலி ஜின்னாவின் உடல்நலம் குறித்த மிக முக்கியமான ரகசியத்தை பாதுகாத்த மும்பையைச் சேர்ந்த 2 மருத்துவர்களுக்கு பாகிஸ்தான் அரசு, நாட்டின் உயரிய குடிமை விருதான 'நிஷான்-ஏ-இம்தியாஸ்' விருதை அறிவித்துள்ளது.

மறைக்கப்பட்ட மருத்துவ ரகசியம்

கடந்த 1946-ம் ஆண்டு, இந்தியப் பிரிவினைக்கு முந்தைய காலகட்டத்தில், முகம்மது அலி ஜின்னாவுக்கு கடுமையான காசநோய் பாதிப்பு இருந்ததை மும்பையைச் சேர்ந்த பார்சி சமூக மருத்துவர்களான டாக்டர் ஜல் ரத்தன்ஜி படேல் மற்றும் டாக்டர் ஜல் தய்போ-கூ ஆகியோர் கண்டறிந்தனர்.

ஜின்னாவின் எக்ஸ்-ரே முடிவுகளை ஆய்வு செய்த அவர்கள், ஜின்னா இன்னும் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருக்க முடியும் என்ற அதிர்ச்சி உண்மையை உணர்ந்தனர். அக்காலகட்டத்தில் இந்த தகவல் அரசியல் ரீதியாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், மருத்துவர்கள் இருவரும் தொழில் தர்மத்தின்படி இந்த விபரத்தை இறுதிவரை ரகசியமாக வைத்திருந்தனர்.

வரலாற்றை மாற்றிய ரகசியம்

ஜின்னாவின் மரணப் படுக்கை ரகசியம் மட்டும் பிரிட்டிஷ் வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபுவிற்கோ அல்லது மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற இந்தியத் தலைவர்களுக்கோ தெரிந்திருந்தால், இந்தியாவின் பிரிவினை மற்றும் பாகிஸ்தான் உருவாக்கம் தடைபட்டிருக்கலாம் அல்லது தள்ளிப்போயிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பாகிஸ்தானின் உயரிய விருது

ஜின்னா இன்னும் சில மாதங்களில் இறந்துவிடுவார் என்று தெரிந்திருந்தால், பிரிட்டிஷ் அரசு பிரிவினையைத் தவிர்த்து கால அவகாசம் கோரியிருக்கக்கூடும். இந்த ரகசியம் காக்கப்பட்டதால் மட்டுமே பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாவது சாத்தியமானது என்பதை அங்கீகரிக்கும் வகையில் தற்போது 'நிஷான்-ஏ-இம்தியாஸ்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குரிய விருதுகள் வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அதிகாரப்பூர்வ விழாவில் வழங்கப்பட உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com