

இஸ்லாமாபாத்
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியது. இதில் இந்தியாவை சேர்ந்த 40 துணை ராணுவப்படை வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இந்த கொடூரச் சம்பவத்திற்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக விளங்கும் மசூத் அசாரை, தொடர்ந்து பாதுகாப்பதிலேயே பாகிஸ்தான் கவனம் செலுத்தி வருகிறது.
புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி ஒரு பேட்டியில்
மசூத் அசார் நிச்சயமாக பாகிஸ்தானில் தான் இருக்கிறார். உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவர் தனது வீட்டை விட்டு வெளியேற முடியாத அளவிற்கு உள்ளார் என கூறினார்.
மேலும் அசாருக்கு எதிராக இந்தியா ஆதாரங்களை கொடுக்க முன்வைத்தால் மட்டுமே அவருக்கு எதிராக செயல்படுவோம் என கூறினார்.
சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்த மசூத் அசார், பாகிஸ்தானில் உள்ள ராணுவ மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தான்.
இந்த நிலையில் ஜெய்ஷ் முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை காணவில்லை என்று பாகிஸ்தான் அரசு பொறுப்பற்ற வகையில் அறிவித்து உள்ளது. இதற்கு எதிராக பிரச்சினை எழுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.
சர்வதேச நிதி கண்காணிப்பு கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை பாரீஸ் நகரில் நடைபெற உள்ளது. சாம்பல் நிறப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்த தனது ஆவணங்களை தாக்கல் செய்ய உள்ளது.
பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு 12 நாடுகளின் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது. ஆயினும் பாகிஸ்தானுக்கு 27 புள்ளிகள் ஆதரவு தேவைப்படும் நிலையில் இந்த அமைப்பின் ஆய்வுக் கூட்டம் பெயஜிங்கில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற போது பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு அந்நாடு 14 புள்ளிகளை பெற்றிருந்தது.
மசூத் அசாரை காணவில்லை என்பதால் அவன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இப்பிரச்சினையை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் எழுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.