

ஸ்ரீநகர்,
காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை ஒடுக்கி அமைதியை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையை யொட்டிய பகுதிகளில் போலீசாருக்கு உதவுவதற்காக சிறப்பு போலீஸ் அதிகாரிகள் (எஸ்.பி.ஓ.) நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, பயங்கரவாதிகளின் நடமாட்டம் பற்றிய தகவல்களை தெரிவிப்பது போன்ற பணிகளை இவர்கள் செய்து வருகிறார்கள்.
இதனால் ஆத்திரம் அடைந்துள்ள பயங்கரவாதிகள் பதவி விலகுமாறு அவர்களை வற்புறுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் சார்பில் அவர்களுக்கு மிரட்டல் விடுத்து சமீபத்தில் வீடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டது.
இந்தநிலையில், அங்குள்ள சோபியான் மாவட்டத்தில் 3 போலீசாரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று சுட்டுக் கொன்று உள்ளனர். அந்த மாவட்டத்தில் உள்ள படாகுண்ட், கர்பான் ஆகிய கிராமங்களுக்கு நேற்று அதிகாலை வந்த பயங்கரவாதிகள் வீடு புகுந்து மிரட்டி 3 போலீசாரை கடத்திச் சென்றனர்.
இந்த சம்பவம் நடந்த போது படாகுண்ட் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், போலீசாரை விட்டுவிடுமாறு பயங்கரவாதிகளிடம் கெஞ்சினார்கள். ஆனால் அதை ஏற்க மறுத்த பயங்கரவாதிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, அவர்களை விரட்டி விட்டு போலீசாரை கடத்திச் சென்று விட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து, கடத்திச் செல்லப்பட்ட போலீசாரை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரின் உடல்கள் படாகுண்ட் கிராமத்தின் அருகே உள்ள ஆற்றுக்கு அப்பால் பழத்தோட்டம் ஒன்றின் அருகே கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தனர். அவர்களை கொன்ற பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
கொல்லப்பட்டவர்கள் பிர்தவுஸ் அகமது, குல்வந்த் சிங், நிசார் அகமது என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் பிர்தவுஸ் அகமதுவும், குல்வந்த் சிங்கும் சிறப்பு போலீஸ் அதிகாரிகள் ஆவார்கள். நிசார் அகமது போலீஸ்காரர் ஆவார்.
இந்த சம்பவத்துக்கு ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது. தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகிறார்கள்.
3 போலீசாரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபமும் தெரிவித்து இருக்கிறார்.
அத்துடன் காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண மத்திய அரசு முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி தெற்கு காஷ்மீரில் போலீசார் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில், 3 போலீசாரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று சுட்டுக் கொன்று இருப்பது காஷ்மீர் மாநில போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, உயிருக்கு பயந்து இர்ஷத் அகமது, தஜலா உசேன் லோன் உள்ளிட்ட 6 போலீஸ்காரர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து உள்ளனர். ராஜினாமா செய்தது குறித்த வீடியோ பதிவுகளை இர்ஷத் அகமதுவும், தஜலா உசேன் லோனும் வெளியிட்டு உள்ளனர். அதில் ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
இவர்களில் தஜலா உசேன் லோன், தான் கடந்த 17-ந் தேதியே பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும், அதை உறுதிப்படுத்தும் வகையில் இப்போது அதுபற்றிய வீடியோ பதிவை வெளியிட்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
இதற்கிடையே, காஷ்மீர் மாநிலத்தில் போலீசார் ராஜினாமா செய்ததாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்து உள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் போலீசார் சிலர் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் தவறானது, உள்நோக்கம் கொண்டது என்பதை அந்த மாநில போலீசார் உறுதிப்படுத்தி இருப்பதாகவும், விஷமிகளால் தவறான பிரசாரத்தால் இதுபோன்ற தகவல்கள் வெளியாவதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு செல்லும் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜும், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷியும் அடுத்த வாரம் அங்கு சந்தித்து பேச திட்டமிடப்பட்டு இருந்தது.
காஷ்மீரில் 3 போலீசார் பயங்கரவாதிகளால் கடத்தி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, இந்த பேச்சுவார்த்தையை அதிரடியாக ரத்து செய்தது.
இதுபற்றி டெல்லியில் நேற்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் காஷ்மீரில் 3 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதிகளையும் பெருமைப்படுத்தும் வகையில் பாகிஸ்தானில் தபால் தலை வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது உறுதியாகிறது. இது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதில் அர்த்தம் இல்லை. எனவே வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜுக்கும், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷிக்கும் இடையே நியூயார்க்கில் அடுத்த வாரம் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு ரவீஷ் குமார் கூறினார்.
இதற்கிடையே பந்திபுரா மாவட்டத்தில் உள்ள சவுக்பாபா என்ற இடத்தில் காட்டுக்குள் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மறைந்து இருந்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இந்த துப்பாக்கி சண்டையில் 5 பயங்கரவாதிகள் குண்டு பாய்ந்து பலி ஆனார்கள். அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டன. லஸ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த இவர்கள் சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்து எல்லையை தாண்டி காஷ்மீருக்குள் வந்தவர்கள் ஆவார்கள்.
அந்த பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று கருதி, பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.