எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 12 இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; 5 வீரர்கள் காயம்

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 12 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் காயம் அடைந்தனர்.
எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 12 இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; 5 வீரர்கள் காயம்
Published on

ஜம்மு,

காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் நேற்று ஈடுபட்டது.

இதன்படி நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, 100 சதவீதம் துல்லியமான தாக்குதலுக்கு பெயர் பெற்ற இந்திய விமானப்படையின் மிராஜ்-2000 ரக போர் விமானங்கள் 12, சக்திவாய்ந்ததும், ஆயிரம் பவுண்ட் எடையுடையதுமான லேசர் வழிகாட்டும் குண்டுகளை சுமந்து கொண்டு பாகிஸ்தானுக்கு பறந்தன.

அவை அங்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம், தளம் அமைந்துள்ள பாலகோட், முசாபராபாத், சகோதி ஆகிய இடங்களில் மிகத்துல்லியமாக குண்டுமழை பொழிந்தன.

21 நிமிடம் நடந்த இந்த தாக்குதலின்போது, அந்த முகாம்களில் அதிகாலை நேரம் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பயங்கரவாதிகள் சுமார் 350 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரின் மைத்துனர் மவுலானா யூசுப் அசாரும் ஒருவர் என நம்பப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை 6.30 மணியளவில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து முன்னறிவிப்பின்றி அத்துமீறி எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதில் அதிக சக்தி கொண்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. 12 முதல் 15 இடங்களில் நடந்த இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.

இதில் பாகிஸ்தானின் 5 முகாம்கள் அழிக்கப்பட்டன. அந்நாட்டு ராணுவத்தினரும் காயமடைந்துள்ளனர். பொதுமக்களின் வீடுகளை கேடயம்போல் பயன்படுத்தி கொண்டு பாகிஸ்தான் படையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

எனினும், பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளை தவிர்த்து பாகிஸ்தான் முகாம்களை இலக்காக கொண்டு இந்திய படையினர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சைக்கு பின் அவர்கள் சீராக உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com