

ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை அருகே இன்று காலை டிரோன் ஒன்று பறந்ததாக எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது சர்வதேச எல்லை அருகே உள்ள ஒரு விவசாய நிலத்தில் டிரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த டிரோன் பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோனாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
டி.ஜே.ஐ. மேட்ரிஸ் 300 ஆர்.டி.கே. (DJI Matrice 300 RTK) என அடையாளம் காணப்பட்ட அந்த டிரோன், சர்வதேச எல்லையில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள லால்பம்கிமா எல்லைச் சாவடி அருகே எல்லை பாதுகாப்புப் படை வீரர்களால் மீட்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த டிரோனில் ஆயுதம் அல்லது போதைப்பொருள் எதுவும் இணைக்கப்பட்டிருக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து விரிவான பரிசோதனைக்காக தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு(FSL) டிரோன் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.