

புதுடெல்லி,
சீனா மற்றும் துருக்கியின் ஆதரவுடன் பாகிஸ்தானின் விண்வெளித் திறன்கள் வேகமாக வளர்ந்து வருவது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு புதிய சவால்களை உருவாக்கலாம் என்று இந்திய முப்படைத் தளபதி எச்சரித்துள்ளார்.
புதுடெல்லியில் உள்ள விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளையில் நேற்று (வெள்ளிக்கிழமை) 'எதிர்காலப் போர்முறை' குறித்த கருத்துக்கள் பேசப்பட்டன. இதில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி (சிடிஎஸ்) ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி கலந்து கொண்டார். 'எதிர்காலப் போர்முறை' குறித்து பேசிய அவர், சீனா மற்றும் துருக்கியின் ஆதரவுடன் பாகிஸ்தானின் விண்வெளித் திறன்கள் வேகமாக வளர்ந்து வருவது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்குப் புதிய சவால்களை உருவாக்கலாம் என்று எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான 'சூப்பர்கோ' சீனாவின் உதவியுடன் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. சீனாவின் உளவு பார்த்தல், கண்காணிப்பு மற்றும் வழிகாட்டும் செயற்கைக்கோள் தொழில்நுட்பங்கள் பாகிஸ்தானுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு சீனா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையிலான ராணுவ மற்றும் விண்வெளி ஒத்துழைப்பு மேலும் நெருக்கமாகியுள்ளதை இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
சமீபத்தில் சீனாவின் விண்கலம் மூலம் பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீரர் விண்வெளி நிலையத்திற்குச் சென்றதும், செயற்கைக்கோள் சிக்னல்களை முடக்கும் தொழில்நுட்பங்களைச் சீனா வளர்த்து வருவதும் இந்தியாவிற்குப் பாதுகாப்பு ரீதியான சவால்களாகப் பார்க்கப்படுகின்றன.
இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தியா தனது விண்வெளிப் பாதுகாப்பு கட்டமைப்பைத் தீவிரமாக வலுப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுமார் ரூ26,968 கோடி மதிப்பீட்டில் 'விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு' (SBS Phase-III) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, அடுத்த 3 ஆண்டுகளில் 52 பிரத்யேக ராணுவ செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
இதில் 21 செயற்கைக்கோள்களை இஸ்ரோவும் (ISRO), 31 செயற்கைக்கோள்களைத் தனியார் நிறுவனங்களும் உருவாக்க உள்ளன. சீனாவுடன் எண்ணிக்கையில் போட்டியிடாமல், இந்திய எல்லைகளைத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறனை மேம்படுத்துவதே இந்தியாவின் இலக்கு என ஜெனரல் சுப்பிரமணி தெரிவித்தார்.