சபரிமலை கோவிலில் பங்குனி ஆராட்டு திருவிழா: வருகிற 8-ந் தேதி நடை திறப்பு

சபரிமலை கோவிலில் பங்குனி ஆராட்டு திருவிழா வருகிற 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சபரிமலை கோவிலில் பங்குனி ஆராட்டு திருவிழா: வருகிற 8-ந் தேதி நடை திறப்பு
Published on

திருவனந்தபுரம்,

பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 8-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

மறுநாள் (9-ந் தேதி) புதன்கிழமை முதல் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு திருவிழா கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து 17-ந் தேதி வரை தினமும் ஸ்ரீபூதபலி, உத்சவபலியும், 17-ந் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும் நடைபெறும். 18-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பையில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடக்கிறது. இதனை தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். 19-ந் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.

இதற்கிடையே பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கூடுதல் பக்தர்களை அனுமதிக்கும் வகையில் நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவு செய்யும் வசதிக்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

உடனடி தரிசன முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் ஆதார் அட்டை நகல் அல்லது பாஸ்போர்ட் நகல் கொண்டு வர வேண்டும். முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு 72 மணி நேரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் நகல் கொண்டு வர வேண்டும். 9-ந் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கேரள அரசின் சிறப்பு பஸ்கள் திருவனந்தபுரம், கோட்டயம், செங்கன்னூர், பத்தனம் திட்டை, கொட்டாரக்கரை, எர்ணாகுளம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு இயக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com