ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி.. போலீசார் தீவிர விசாரணை

மருத்துவ கல்லூரி மாணவி ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி.. போலீசார் தீவிர விசாரணை
Published on

ராமநகர்,

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா அம்பரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 20). இவர் பெற்றோருடன் ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் வசித்து வந்தார். மேலும் சென்னப்பட்டணாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.

தினமும் வீட்டில் இருந்துதான் கல்லூரிக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் கல்லூரியில் விசாரித்தபோது மகாலட்சுமி நேற்று முன்தினம் மதியமே வீட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டதாக கூறினர்.

இதனால் பதறிப்போன அவர்கள் இதுபற்றி அக்கூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமியை தேடினர். இந்த நிலையில் நேற்று காலை நிங்கராஜ்புரம் ஏரியில் மகாலட்சுமி பிணமாக மிதந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அக்கூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதையடுத்து தீயணைப்பு படையினருடன் விரைந்து வந்த போலீசார் மகாலட்சுமியின் உடலை மீட்டனர். பின்னர் மகாலட்சுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகாலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவில்லை என்பதால், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com