துணை ராணுவத்தினர் 100 நாட்கள் குடும்பத்துடன் செலவிட அனுமதி - புதிய திட்டம் விரைவில் அமல்

துணை ராணுவ வீரர்கள் ஆண்டுக்கு 100 நாட்கள் தங்கள் குடும்பத்துடன் செலவிட அனுமதிக்கும் புதிய திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது.
கோப்புப் படம் PTI
கோப்புப் படம் PTI
Published on

புதுடெல்லி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சி.ஆர்.பி.எப்., எல்லை பாதுகாப்பு படை, இந்தோ-திபெத் எல்லை போலீஸ், இந்திய தொழிலக பாதுகாப்பு படை ஆகியவற்றின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்தார். அப்போது, ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

துணை ராணுவ படையினர் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 100 நாட்கள், தங்கள் குடும்பத்துடன் செலவிட அனுமதி அளிப்பதுதான் அந்த திட்டம்.

துணை ராணுவப்படையினர், உயரமான மலைகளிலும், கடும் குளிரிலும், அடர்ந்த காடுகளிலும் சிரமத்துடன் பணியாற்றி வருகிறார்கள். அவர்களிடையே தற்கொலை செய்து கொள்வதும், தங்களுக்குள் துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதும் அதிகரித்து வருகிறது. எனவே, அவர்களது மனஅழுத்தத்தை போக்கி, மகிழ்ச்சியாக வாழ இத்திட்டத்தை அவர் அறிவித்தார்.

இந்த திட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறது. கடைசியாக, இம்மாத தொடக்கத்தில் ஒரு கூட்டம் நடந்தது. இந்த திட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதனால் விரைவில் திட்டம் அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சி.ஆர்.பி.எப். இயக்குனர் குல்தீப்சிங் கூறியதாவது:-

துணை ராணுவ படையினருக்கு தற்போது சராசரியாக 75 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. சூழ்நிலைக்கேற்ப இது கூடுதலாகவோ, குறைவாகவோ அமையும்.

அவர்களுக்கு 100 நாள் விடுமுறை அனுமதிக்கும் திட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதை எப்படி அமல்படுத்துவது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அடுத்த மாதம் இறுதி முடிவு எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com