ஒடிசா: கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப்படை வீரர் பலி

நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
புவனேஷ்வர்,
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் - ஒடிசா எல்லையில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், ஒடிசா சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சுந்தர்கர் மாவட்டம் ரூர்கிலா பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது நக்சலைட்டுகள் பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப்படை வீரர் சத்யபின் குமார் சிங் (வயது 34) உயிரிழந்தார். உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர் உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரை சேர்ந்தவர் ஆவார்.






