ரீல்ஸ் எடுத்ததால் ஆத்திரம்...14 வயது மகளை அடித்துக் கொன்ற பெற்றோர் - அதிர்ச்சி சம்பவம்

சிறுமியின் உடலை கல்குவாரியில் வீசிவிட்டு, மகள் காணாமல் போய்விட்டதாக பெற்றோர் நாடகமாடியுள்ளனர்.
அடித்துக் கொலை
கோப்புப்படம்
Published on: 

ஜாம்ஷெட்பூர்,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரீல்ஸ் எடுத்த மகளை பெற்றோர் அடித்துக் கொன்று, காணாமல் போனதாக நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி மாயம்

ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டம் லயாடிஹ் கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்திர முர்மு. இவரது மனைவி சுமணி. இந்த தம்பதிக்கு கனக்லதா முர்மு (14 வயது) என்ற மகள் இருந்தார். அவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி சிறுமி காணாமல் போனதாக, பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

உடல் கண்டெடுப்பு

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி சிறுமியின் உடல் அங்குள்ள கல்குவாரி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிர்ச்சி தகவல்கள்

இதனிடையே சிறுமியின் பெற்றோரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தது. அதன்படி, எப்போதும் செல்போனில் மூழ்கி இருந்த சிறுமி, ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் கடந்த 10-ந்தேதி சிறுமியை கம்பால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெற்றோர் கைது

இதையடுத்து சிறுமியின் உடலை பெற்றோர் கல்குவாரியில் வீசிவிட்டு, மகள் காணாமல் போய்விட்டதாக நாடகமாடியுள்ளனர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து மகளை கொலை செய்ததை ஒப்புக் கொண்ட பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.

X