

ஐதராபாத்,
ஐதராபாத்தில், சிறுவர்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை இயக்கி விபத்தை ஏற்படுத்துவது சமீப காலமாக அதிகரித்து காணப்பட்டது. எனவே, இவற்றை களைய ஐதராபாத் போலீசார் முழு வீச்சில் களம் இறங்கினர். இதன்படி, சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது குறித்து சிறப்புக்கவனம் செலுத்தி அவர்களை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தினர்.
இதன்படி, ஐதராபாத் நகரில் வாகனங்களை ஓட்டி பிடிபட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த மாதத்தில், மட்டும் 20 பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல், நடப்பு மாதத்தில், 6 பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவர்களை வாகனம் இயக்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என்று தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ஐதராபாத் மாநகர இணை கமிஷனர் அனில் குமார் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
முன்னதாக, இந்த மாத துவக்கத்தில் 2-ஆம் ஆண்டு இன்ஜினியரிங் படிக்கும் மாணவிகள் நான்கு பேர், பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், காரை அதிவேகமாக ஓட்டி வந்தனர். கார், குஷைகுடா பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் தாறுமாறாக ஓடியது. இதில், நடைபாதையில் படுத்து தூங்கி கொண்டு இருந்த அசோக் (வயது 48) என்பவரும், அவரது மகன் மகேஷும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.