

தமிழ்நாட்டில் 112 குழந்தைகள் பதிவு
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஒரு கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது:-
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் கண்டறிந்து, இதற்கென தொடங்கப்பட்ட வலைத்தளத்தில் பதிவு செய்யுமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கடந்த 22-ந் தேதி கேட்டுக்கொண்டது. கடந்த 29-ந் தேதி நிலவரப்படி, 292 குழந்தைகளின் பெயர்கள், அந்த வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.அதிகபட்சமாக, தமிழ்நாடு 112 குழந்தைகளின் பெயர்களையும், ஆந்திரா 85 குழந்தைகளின் பெயர்களையும் பதிவு செய்துள்ளன. 18 மாநிலங்கள் ஒரு குழந்தையின் பெயரைக்கூட பதிவு செய்யவில்லை. இந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கு பணம் செலவிடப்படும். 18 வயது பூர்த்தி ஆகும்போது பயன்படுத்தும்வகையில், தலா ரூ.10 லட்சம் போட்டு வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினா.
ஆவணம் இல்லாதவர்களுக்கு தடுப்பூசி
மற்றொரு கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவீண் பவார் கூறியதாவது:-
புகைப்பட அடையாள ஆவணங்கள் இல்லாத, தகுதியுள்ள பயனாளிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.அதன்படி, கோ-வின் வலைத்தளத்தை பயன்படுத்தி, கடந்த 26-ந் தேதிவரை, புகைப்பட அடையாள ஆவணம் இல்லாத 3 லட்சத்து 83 ஆயிரம்பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்களவையில் கேள்வி நேரத்தில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-
70 பேருக்கு டெல்டா பிளஸ்
58 ஆயிரத்து 240 மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்தி ஆய்வு செய்யப்பட்டது. அவற்றில், 17 ஆயிரத்து 169 மாதிரிகள், உருமாறிய டெல்டா வைரஸ் பாதித்தவையாக இருந்தன. இந்தியாவில் கொரானா இரண்டாவது அலை உருவானதற்கும், உலக நாடுகளில் எல்லாம் கொரோனா தீவிரமாக பரவியதற்கும் டெல்டா வைரஸ்தான் காரணம்.4 ஆயிரத்து 172 மாதிரிகள், உருமாறிய ஆல்பா வைரஸ் தாக்கியவையாகவும், 217 மாதிரிகள் பீட்டா வைரஸ் தாக்கியதாகவும் இருந்தன.மிகவும் கொடிய டெல்டா பிளஸ் வைரஸ், இந்தியாவில் 70 பேரை தாக்கி இருப்பது இந்த மரபணு வரிசைப்படுத்தல்
ஆய்வில் கண்டறியப்பட்டது. அதிகபட்சமாக மராட்டியத்தில் 23 பேருக்கும், மத்தியபிரதேசத்தில் 11 பேருக்கும், தமிழ்நாட்டில் 10 பேருக்கும் டெல்டா பிளஸ் தாக்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.