மராட்டிய அரசியல் விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

மராட்டிய அரசியல் பிரச்சினையை கிளப்பி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தில் இரு அவையின் அலுவல்களும் பாதிக்கப்பட்டன.
மராட்டிய அரசியல் விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி
Published on

புதுடெல்லி

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடியபோது, எதிர்க்கட்சிகள், மராட்டிய அரசியல் விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டன.

மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மராட்டியத்தில் நடைபெற்றிருப்பது ஜனநாயகப் படுகொலை என குற்றம்சாட்டினார். தொடர்ந்து, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியிருந்த காங்கிரஸ் எம்.பிக்கள் ஹிபி ஈடன், பிரதாபன் ஆகியோரை, அவற்றை கீழே வைக்குமாறு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார். அதற்கு அவர்கள் இருவரும் அதை கேட்கவில்லை. இரண்டு காங்கிரஸ் எம்.பிக்களையும், உடனடியாக வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பி, தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மக்களவை கூடியபோது, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேநிலைமை, மாநிலங்களவையிலும் நிலவியது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, மராட்டியத்தில் புதிய அரசு பதவியேற்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது கட்சி எம்.பிக்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com