சபாநாயகரின் அதிகாரங்களை நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மணிப்பூர் மந்திரிக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

மணிப்பூர் மந்திரிக்கு எதிரான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சபாநாயகரின் அதிகாரங்கள் குறித்து நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தீர்ப்பு அளித்து உள்ளது.
சபாநாயகரின் அதிகாரங்களை நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மணிப்பூர் மந்திரிக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
Published on

புதுடெல்லி,

60 இடங்களை கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடந்தது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை. ஆனால் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி 28 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வந்தது.

ஆனால் 21 இடங்களை பிடித்த பாரதீய ஜனதா கட்சி, நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, லோக் ஜனசக்தி கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க உரிமை கோரியது. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. சியாம் குமாரும் ஆதரவு அளித்தார்.

அதையடுத்து பைரன்சிங் தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி, அங்கு ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. சியாம் குமார், பாரதீய ஜனதாவுக்கு தாவி மந்திரி ஆனார்.

இதையடுத்து கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் சியாம் குமாரை தகுதி நீக்கம் செய்வதற்கு சபாநாயகர் கேம்சந்த் சிங்கிடம் காங்கிரஸ் கட்சியினர் 13 மனுக்கள் அளித்தனர்.

ஆனால் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கெய்சாம் மேகசந்திரா, பஜூர் ரகீம் ஆகியோர் மணிப்பூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டாலும், சபாநாயகரின் விருப்புரிமை பற்றிய விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

அதைத் தொடர்ந்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர்.

இந்த வழக்கை நீதிபதி ரோகிண்டன் நாரிமன் தலைமையிலான அமர்வு விசாரித்து, சியாம் குமார் தகுதி நீக்க பிரச்சினையில், வழக்குதாரர்களான கெய்சாம் மேகசந்திராவும், பஜூர் ரகீமும் மணிப்பூர் சட்டசபை சபாநாயகரை மீண்டும் நாட வேண்டும், அவர் 4 வாரத்தில் முடிவு எடுக்க தவறினால் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாடலாம் என தீர்ப்பு அளித்தனர்.

மேலும், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தை பொறுத்தமட்டில், சபாநாயகரும் ஒரு அரசியல் கட்சி சார்ந்தவராக இருக்கிறார் என்ற நிலையில், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழான மனுக்கள் மீது முடிவு எடுப்பதில் சபாநாயகரின் அதிகாரங்களை நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com