பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட அமர்விலும் கடும் அமளி நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 28-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கடந்த 13-ந்தேதியுடன் முதல்கட்ட அமர்வு முடிவடைந்தது. சபாநாயகர் ஓம் பிர்லா முற்றிலும் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி, அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்றம் நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட அமர்வு நாளை முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் நாளிலேயே மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா மீதான பதவி நீக்க தீர்மானம் குறித்த விவாதம் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றே தீர்மானம் மீது வாக்கெடுப்பும் நடைபெறும் என்று தெரிகிறது.

தற்போது எம்.பி.க்கள் பலத்தின் அடிப்படையில் ஓம் பிர்லாவுக்கு எதிரான தீர்மானமும் தோல்வியை சந்திக்கும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேற்கு ஆசியா நிலவரம் குறித்தும், இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பல் தாக்கப்பட்டது குறித்தும், ரஷிய கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் மிரட்டல் குறித்தும் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சியினர் பிரச்சினையை கிளப்புவார்கள்.மத்திய அரசு இந்த விவகாரங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட அமர்விலும் கடும் அமளி நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com