

புதுடெல்லி
நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கான மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு மக்களவையில் இன்று கூறும்போது, வார இறுதி நாட்களில் இரு அவைகளும் இயங்காது என கூறினார். பண்டிகை நாட்களை முன்னிட்டு, கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடவில்லை. இதனால், வருகிற 28, 29 ஆகிய இரு நாட்கள் (சனி, ஞாயிறு) இரு அவைகளும் செயல்பட முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இரு அவைகளிலும் உள்ள அலுவல் ஆலோசனை குழுக்களுக்கான உறுப்பினர்கள் தன்னிடம், வார இறுதி நாட்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்ட வேண்டாம் என ஆலோசனையாக கூறினர்.
அதனால், நாடாளுமன்றம் நாளை (26-ந்தேதி) செயல்படாது என்றார். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மார்ச் 31-ந்தேதி அன்றும் இரு அவைகளும் செயல்படாது என்றும் அவர் கூறினார். நாளை ராம நவமி ஆகும்.
ஏற்கனவே ஜனவரி மாத இறுதி வாரத்தில், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு அறிவித்த கால அட்டவணையின்படியே, தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் அமர்வானது ஏப்ரல் 2-ந்தேதி வரை தொடரும் என்றும் கூறினார். வெள்ளிக்கிழமை மதியத்திற்கு பின்னர் தனிநபர் அலுவல்கள் நடைபெறாது என்றும் அரசின் நிகழ்ச்சி நிரல்கள் எடுத்து கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.