

புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ந் தேதி தொடங்கியது. கடந்த மாதம் 9-ந் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. இதையடுத்து 2-வது கட்ட அமர்வு நேற்று காலை தொடங்கி நடந்தது.
மக்களவைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தபோது, வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றதற்கு அக்கட்சி எம்.பி.க்கள் கைதட்டி வரவேற்றனர். மேலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
அவை தொடங்கியதும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியை சேர்ந்த எம்.பி. நைபியூ ரியோ அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். அவர் 3 முறை நாகாலாந்து முதல்-மந்திரியாக இருந்தவர். தற்போது மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மறைந்த முன்னாள் எம்.பி.க்கள் 4 பேர் மறைவுக்கு சபாநாயகர் இரங்கல் தெரிவித்தார்.
அதன் பிறகு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி தொடர்பான விவகாரத்தை எழுப்பின. நிரவ் மோடியின் ரூ.12 ஆயிரத்து 700 கோடி கடன் மோசடி குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அதே சமயம் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்று தெலுங்கு தேச எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். இதேபோல் தெலுங்கானாவில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் வலியுறுத்தினர்.
இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அ.தி.மு.க. எம்.பி.க்கள் கோஷமிட்டனர். அவையில் தொடர்ந்து அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 12 மணி வரை அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார். ஆனால் அதன் பிறகும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் நிரவ் மோடி விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பினர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் ஊழல் நடைமுறை அறிக்கைகள் சட்டம் 267-ன் கீழ் விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அளித்திருந்தன. இதேபோல் கார்த்தி சிதம்பரம் ஊழல் விவகாரம் தொடர்பாக விவாதிக்க பா.ஜனதா எம்.பி.யும் நோட்டீஸ் கொடுத்திருந்தார்.
நிரவ் மோடியின் வங்கி கடன் மோசடி குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அவையை சிறிது நேரம் ஒத்திவைத்தார்.
மேலும் தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதேபோல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என அ.தி.மு.க, தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
தொடர்ந்து அமளி நீடித்ததால் இந்த அவையின் மாண்பை குலைக்காதீர்கள் என வெங்கையா நாயுடு கோபத்துடன் கூறினார். மேலும் அவர் கூறுகையில், வங்கி மோசடி குறித்து உரிய நேரத்தில் விவாதம் நடத்தப்படும். காவிரி பிரச்சினை தொடர்பாக கேள்வி நேரம் முடிந்ததும் பேசலாம் என்றார். எனினும் அமளி தொடர்ந்ததால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.