நாடாளுமன்ற தேர்தல் செலவு: தி.மு.க. ரூ.170 கோடி, அ.தி.மு.க ரூ.5.7 கோடி

நாடாளுமன்ற தேர்தலுக்கு சந்திரசேகர ராவ் கட்சியான பாரத ராஷ்டிர சமிதி ரூ.197 கோடி செலவிட்டு முதலிடத்தில் உள்ளது.
புதுடெல்லி,
2023-24-ம் ஆண்டுக்கான பிராந்திய கட்சிகளின் வருமானம் மற்றும் செலவினம் குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு (2024) நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் செலவினங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க ரூ.170 கோடியை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க ரூ.5.7 கோடியை செலவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேர்தல் செலவுகளில் முன்னணி தலைவர்களின் பிரசார சுற்றுப்பயணங்கள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், பொதுக் கூட்டங்கள், நட்சத்திர பேச்சாளர்களை ஈடுபடுத்துதல், தேர்தலுக்கு வாகனங்களைத் தயார்படுத்துதல் போன்றவை அடங்கும்.
இதில், தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சி ரூ.197 கோடியை செலவிட்டு இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. தி.மு.க 2-வது இடத்தில் உள்ளது. 2023-24-ம் ஆண்டில் தி.மு.க.வின் மொத்த வருமானம் ரூ.180 கோடியாகவும், அ.தி.மு.க.வின் வருமானம் ரூ.46 கோடியாகவும் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.






