

புதுடெல்லி,
பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியால் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. டிசம்பர் 1ந் தேதி அந்த படம் வெளியாக இருந்தது. ஆனால் அந்த படத்தில் வரலாற்றை திரித்து கூறியிருப்பதாக பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில மாநில அரசுகள் அப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என அறிவித்தன.
சர்ச்சைக்குரிய இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி மறுத்தார். படக்குழு அனுப்பிய விண்ணப்பத்தில் குறைகள் இருப்பதாக அதை திருப்பி அனுப்பினார்.
இந்நிலையில் இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட பாராளுமன்ற குழு (தகவல் தொழில்நுட்பம்) இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி மற்றும் பட தயாரிப்பாளர், தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் ஆகியோருக்கு அழைப்பு விடுத்து உள்ளது. இரு தரப்பினரும் தங்கள் தரப்பு விளக்கத்தை அப்போது அளிக்கலாம் என பாராளுமன்ற குழு தெரிவித்தது.30 பேர் கொண்ட இந்த குழு கூட்டம் நாளை (வியாழக்கிழமை) கூட இருக்கிறது. இக்குழுவில் நடிகர்கள் பரேஷ் ராவல், ராஜ் பாப்பர் ஆகிய எம்.பி.க்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.