பார்த்தா சாட்டர்ஜி குறித்து ஊடகங்களில் கருத்து தெரிவிக்க கூடாது; குணால் கோஷிற்கு கட்சி தலைமை உத்தரவு

பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜி குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம் என்று குணால் கோஷிடம் திரிணாமுல் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Image Courtesy:PTI
Image Courtesy:PTI
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, கல்வி மந்திரியாக இருந்த பார்த்தா சட்டர்ஜியும், அவருடைய உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியும் அமலாக்கத்துறையால் கடந்த மாதம் 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

அர்பிதா முகர்ஜியின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.21 கோடிக்கு மேற்பட்ட ரொக்கமும், இன்னொரு வீட்டில் ரூ.28 கோடியும் கைப்பற்றப்பட்டன. ஏராளமான தங்க, வெள்ளி நகைகளும் சிக்கின. அவர்கள் இருவரையும் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

முன்னதாக, பார்த்தா சாட்டர்ஜியை உடனடியாக மந்திரி பதவி மற்றும் அனைத்து கட்சி பதவிகளில் இருந்தும் அவரை நீக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரசின் பொது செயலாளர் குணால் கோஷ் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனைதொடர்ந்து, மேற்கு வங்க அமைச்சரவை மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து பார்த்தா சாட்டர்ஜி நீக்கப்பட்டார்.

இதற்கிடையே, சமீபத்தில் நிருபர்களிடம் பேசிய குணால் கோஷ், "சிறைவாசம் எப்படி உள்ளது என்பதை பார்த்தா உணரவேண்டும். நான் என் வாழ்நாளை சிறையில் கழித்ததால் பார்த்தாவும் அவ்வாறே செய்யட்டும்" என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜி குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குணால் கோஷிடம் தெரிவித்தாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இது குறித்து 14 நாட்களுக்கு ஊடகங்களில் பேச வேண்டாம் என்று குணால் கோஷிடம் கட்சி தலைமை கேட்டுகொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com