

காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் அரசியல் விவகார குழு கூட்டம் ஸ்ரீநகரில் உமர் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. 4 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தை அடுத்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், காஷ்மீர் மாநிலத்தில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநிலத்தில் குறிப்பாக காஷ்மீர் பிராந்தியத்தில் நிலவும் உறுதிப்படுத்தப்படாத மற்றும் பதற்றமான சூழ்நிலை குறித்து கட்சி தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது.
காஷ்மீரில் தற்போது உள்ள ஒரு புதிரான சூழ்நிலையை விலக்க வேண்டும் என்று மத்திய அரசை கட்சி தலைமை வலியுறுத்துகிறது. அதோடு உள்ளூர் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த அவசர நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை பறிக்க முயன்றால் கட்சி போராடும் என தலைவர்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். மாநிலத்தின் நலனை பாதுகாக்க நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் எந்த முயற்சியையும் மேற்கொள்ள கட்சி உறுதி எடுத்துள்ளது.
சோதனையான இந்த நேரத்தில் மக்கள் ஒருங்கிணைந்து செயல்படவும், அமைதி காக்க வேண்டியது அத்தியாவசியம் என்றும் கட்சி வலியுறுத்துகிறது. மாநிலத்தின் நலன்களை பாதுகாப்பதில் கட்சி எப்போதும் முன்னணியில் உள்ளது. மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை சிதைக்க யாரையும் கட்சி அனுமதிக்காது எனக் கூறியுள்ளார்.