ஓடும் ரெயிலில் விளக்கேற்றி பூஜை; பயணி அதிரடி கைது

ரெயில்களுக்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
ஓடும் ரெயிலில் விளக்கேற்றி பூஜை; பயணி அதிரடி கைது
Published on

புசாவல்,

ஓடும் ரெயிலின் ஏ.சி. பெட்டிக்குள் விளக்கேற்றி பூஜை செய்த மத்தியபிரதேசத்தை சேர்ந்த பயணி ஒருவரை ரெயில்வே போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ரெயிலில் விளக்கேற்றி வழிபாடு

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் கரீபா (வயது55). இவர் டெல்லியில் இருந்து மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்த 'ஹசரத் நிஜாமுதீன்-மைசூரு எக்ஸ்பிரஸ்' ரெயிலின் ஏ.சி. முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார். ரெயில் நள்ளிரவில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, அவர் திடீரென தனது பையில் இருந்து தீப்பெட்டி, பித்தளை விளக்கு மற்றும் எண்ணெய் டப்பாவை எடுத்துள்ளார். ஓடும் ரெயிலில் அவர் விளக்கேற்றி வழிபட தொடங்கினார்.

ரெயில் பெட்டிக்குள் விளக்கு எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனடியாக ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த டிக்கெட் பரிசோதகர், ரெயிலுக்குள் தீபம் ஏற்றுவது தவறு. இது பயங்கர தீ விபத்தை ஏற்படுத்தும். உடனடியாக அதை அணையுங்கள் என்று எச்சரித்தார். ஆனால், அந்த பயணியோ, 'என் பூஜை முடியும் வரை விளக்கை தொடமாட்டேன்' என்று பிடிவாதம் பிடித்துள்ளார். இந்த மொத்த விவாதத்தையும் டிக்கெட் பரிசோதகர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

நடுவழியில் இறக்கிவிட்டு கைது

இதையடுத்து, அடுத்த நிறுத்தமான புசாவல் ரெயில் நிலையம் வந்ததும், அந்தப்பயணி அதிரடியாக ரெயிலை விட்டு கீழே இறக்கப்பட்டு, ரெயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த தீப்பெட்டி மற்றும் விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் மீது ரெயில்வே சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றத்திற்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. ரெயில்களுக்குள் தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, ஊதுபத்தி போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும் என்று ரெயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com