இந்தியாவில் இதுவரை நடந்த பயணிகள் விமான விபத்துகள்


இந்தியாவில் இதுவரை நடந்த பயணிகள் விமான விபத்துகள்
x
தினத்தந்தி 12 Jun 2025 6:16 PM IST (Updated: 12 Jun 2025 6:18 PM IST)
t-max-icont-min-icon

லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர்.

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று மதியம் லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறு காரணமாக அருகில் உள்ள மருத்துவர்கள் விடுதியில் விழுந்து வெடித்து சிதறிய விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

இந்த நேரத்தில், இந்தியாவில் இதற்கு முன்பு நடந்த பயணிகள் விமான விபத்துகள் பற்றி பார்ப்போம்.

* 1962 ஜூலை 7:- மும்பையில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து வடகிழக்கே உள்ள மலை மீது மோதிய விபத்தில், 117 பயணிகளில் 94 பேர் கொல்லப்பட்டனர். இந்த விபத்தில் இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபாவும் உயிரிழந்தார்.

* 1973 மே 31:- சென்னையில் இருந்து டெல்லி நோக்கி சென்ற விமானம் பாலம் விமான நிலையத்தை நேருங்கியபோது இரவு 9.50 மணிக்கு புயல் மழை காரணமாக உயர் மின் அழுத்தக் கம்பியில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 65 பேரில் 48 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

* 1976 அக்டோபர் 12:- மும்பையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் அதன் 2-வது இயந்திரம் செயலிழந்த காரணத்தால், மீண்டும் மும்பையில் தரையிறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், 300 அடி உயரத்திற்கு தாழ்வாக விமானம் வந்தபோதும் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதியது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 89 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் என 95 பேரும் பலியானார்கள். இவர்களில் 19 பேர் பெண்கள் ஆவார்கள். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னப்ப நாடார் இந்த விபத்தில் பலியானார். இதேபோல், நடிகை ராணி சந்திரா, அவரது தாயார் காந்திமதி, சகோதரிகள் அம்புலி, சீதா, நிம்மி, அவரது குழுவில் இடம்பெற்றிருந்த ஜெயலட்சுமி (பாடகி), சி.கே.கிருஷ்ணகுட்டி (மத்தளம்), கோதண்டராம் (மிருதங்கம்), பி.எஸ்.மாணிக்கம் (ஆர்மோனியம்) ஆகியோரும் இறந்துபோனார்கள்.

* 1978 ஜனவரி 1:- மும்பையில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து மும்பை பாந்த்ரா கடற்கரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 213 பயணிகளும் கொல்லப்பட்டனர்.

* 1988 அக்டோபர் 19:- மும்பையில் இருந்து அகமதாபாத் நோக்கி சென்ற விமானம், விமான நிலையத்தில் தரையிறங்கியபோது மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணம் செய்த 135 பேரில் 133 பேர் கொல்லப்பட்டனர்.

* 1990 பிப்ரவரி 14:- மும்பையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளாகியது. இதில் விமானத்தில் பயணம் மேற்கொண்ட 146 பேரில் 92 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

* 1991 ஆகஸ்டு 16:- கொல்கத்தாவில் இருந்து நாகலாந்தில் உள்ள திம்மபூர் விமான நிலையம் நோக்கி சென்ற விமானம் மணிப்பூர் மாநிலம் அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 69 பேர் பலியானார்கள்.

* 1996 நவம்பர் 12:- சவுதி ஏர்லைன்ஸ் - கஜகஸ்தான் விமானங்கள் டெல்லி அருகே சர்கி தாத்ரி என்ற பகுதியில் நடுவானில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 349 பேர் இறந்துபோனார்கள். இதுதான் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய விமான விபத்து ஆகும்.

* 1999 டிசம்பர் 24:- நேபாளம் தலைநகர் காத்மண்டில் இருந்து டெல்லி நோக்கி190 பேருடன் வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நடுவழியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. முதலில் அமிர்தசரசில் தரையிறக்கப்பட்ட விமானம் பிறகு பாகிஸ்தானில் உள்ள லாகூர் விமான நிலையம் சென்றது. பாகிஸ்தான் அரசு அடைக்கலம் கொடுக்க மறுத்ததால் துபாய்க்கு விமானம் சென்றது. அங்கு எரிபொருளை நிரப்பிய விமானம் ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகார் விமான நிலையம் சென்றது. விமானத்தை கடத்திய 5 பயங்கரவாதிகளும் சிறையில் உள்ள தங்கள் இயக்கத்தை சேர்ந்த சிலரை விடுவிக்கக்கோரினர். வேறு வழியில்லாமல் மத்திய அரசும் 3 பயங்கரவாதிகளை விடுத்து, விமானத்தை மீட்டது. என்றாலும், விமானத்தில் இருந்த டாக்டர் ரூபின் காட்யால் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். 17 பயணிகள் காயம் அடைந்தனர்.

* 2000 ஜூலை 17:- கொல்கத்தாவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க முயன்றபோது குடியிருப்பு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 55 பயணிகள், தரையில் இருந்த 5 பேர் என மொத்தம் 60 பேர் கொல்லப்பட்டனர்.

* 2010 மே 22:- துபாயில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையம் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முயன்றபோது ஓடு பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 166 பேரில் 158 பயணிகள் பலியானார்கள்.

* 2020 ஆகஸ்டு 7:- துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு கொரோனா காலத்தில் வந்த விமானம் மோசமான வானிலை மற்றும் விமானியின் தவறால் ஓடுபாதையைவிட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 190 பேரில் 21 பயணிகள் மரணம் அடைந்தனர். 110 பேர் காயம் அடைந்தனர்.

1 More update

Next Story