பதஞ்சலியின் 4 நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும் - ராம்தேவ்

அடுத்த 5 ஆண்டுகளில் பதஞ்சலியின் 4 நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும் என்று ராம்தேவ் தெரிவித்தார்.
பதஞ்சலியின் 4 நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும் - ராம்தேவ்
Published on

பதஞ்சலி நிறுவனங்கள்

பதஞ்சலி நிறுவனங்களின் நிர்வாகியும், பதஞ்சலி யோகபீட தலைவருமான ராம்தேவ், நிருபர்களிடம் கூறியதாவது:-

பதஞ்சலி ஆயுர்வேத், பதஞ்சலி மருத்துவம், பதஞ்சலி ஆரோக்கியம், பதஞ்சலி 'லைப்ஸ்டைல்' ஆகிய 4 பதஞ்சலி நிறுவனங்களை அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிட இருக்கிறோம். அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன. பதஞ்சலி குழுமத்தின் இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடியை எட்டுவதற்கான செயல்திட்டத்தை விரைவில் வெளியிடுவேன். பதஞ்சலி குழுமத்தின் வருவாய் தற்போது ரூ.40 ஆயிரம் கோடியாக இருக்கிறது. அதையும் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

பதஞ்சலி புட்ஸ் நிறுவனத்தின் பனை எண்ணெய் தோட்டம்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய பனை எண்ணெய் தோட்டமாக இருக்கும். பனை எண்ணெய் மரங்களை ஒருமுறை நடவு செய்தால், அடுத்த 40 ஆண்டுகளுக்கு அவற்றின் மூலம் வருவாயை பெற்றுக்கொள்ளலாம்.

பனை எண்ணெய் தோட்டம்

பனை எண்ணெய் தோட்டம் மூலம் ஆண்டு வருமானம் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியா ஆண்டுதோறும் சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு செலுத்தும் சுமார் ரூ.3 லட்சம் கோடியை மிச்சப்படுத்த முடியும். பதஞ்சலி குழுமம் 5 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைகளுக்கு தாயகமாக இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 5 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்ட பதஞ்சலி ஆரோக்கிய மையங்கள் திறக்கப்படும். முதல்கட்டமாக ஆயிரம் ஆரோக்கிய மையங்களும், அதன்பிறகு 10 ஆண்டுகளில் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் சேர்த்து ஒரு லட்சம் ஆரோக்கிய மையங்களும் நிறுவப்படும்.

சட்டப்படி நடவடிக்கை

பதஞ்சலியின் தயாரிப்புகள் அனைத்து தரமானவை. சிலர் அவற்றை தவறாக சித்தரிக்கின்றனர். அதை இனி நான் விடமாட்டேன். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக தற்போது சுமார் 100 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்கள் இந்த பொய் பிரசாரங்களை நம்பத் தயாராக இல்லை. வெளிநாடுகளில் பதஞ்சலி தயாரிப்புகளில் எந்த புகாரும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, தனக்கு வயிற்றில் அறுவைசிகிச்சையும், இதய மாற்று அறுவைசிகிச்சையும் செய்யப்பட்டு இருப்பதாக சிலர் அவதூறு பரப்புகின்றனர் என்று கூறிய ராம்தேவ், திடீரென்று தான் போர்த்தியிருந்த ஆடையை அகற்றி, தனக்கு அறுவைசிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை என்று காட்டியதோடு, ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com