

பதன்கோட்,
காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஜனவரி மாதம் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவன் சிறுவன் என தெரிவிக்கப்பட்டது. கதுவா கோர்ட்டில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. அப்போது பல்வேறு இடையூறு ஏற்பட்டதால் இந்த வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றுமாறு சுப்ரீம் கோர்ட்டில் சிறுமியின் தந்தை மனு செய்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வழக்கை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதன்படி சிறுமி கொலை வழக்கு பதான்கோட் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. கடந்த மாதம் இறுதியில் வழக்கு பதான்கோட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக கைதான 8 பேரில் 7 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைதானவர்களில் ஒருவன் சிறுவன் என்பதால் அழைத்து வரப்படவில்லை. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றப்பத்திரிகையை உருது மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 4-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்றது.
இப்போது சிறுமி பலாத்கார, கொலை வழக்கில் 7 குற்றவாளிகளுக்கு எதிராக பதன்கோட் நீதிமன்றம் குற்றச்சாட்டை பதிவு செய்து உள்ளது.