ஆம்புலன்சில் ஆக்சிஜன் தீர்ந்ததால் நோயாளி உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்

பரணியாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
ஆம்புலன்சில் ஆக்சிஜன் தீர்ந்ததால் நோயாளி உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
Published on

போபால்,

ஆம்புலன்சில் ஆக்சிஜன் தீர்ந்ததால் நோயாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் மண்டலா மாவட்டம் சன்ஹிரா மல் கிராமத்தை சேர்ந்த இளைஞர் அஜித் பரணியா (வயது 21). இவருக்கு கிட்னி தொடர்பான பிரச்சினை இருந்துள்ளது. இதற்காக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி அஜித் பரணியாவுக்கு பம்ஹனி நகரில் உள்ள மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து, அஜித் பரணியாவை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர் கூறியுள்ளார்.

இளைஞர் உயிரிழப்பு

இதையடுத்து அந்த மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்சில் அஜித் பரணியாவை அவரது பெற்றோர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் அவருக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் தீர்ந்துள்ளது. இதனால், நோயாளி அஜித் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆம்புலன்சில் பெற்றோர் கண்முன்னே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆம்புலன்சில் ஆக்சிஜன் தீர்ந்ததால் நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com