மேற்கு வங்காளத்தில் மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் கடும் பாதிப்பு

மேற்கு வங்காளத்தில் மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் கடும் பாதிப்பு
Published on

கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை கடந்த 10-ந்தேதி நோயாளி ஒருவரின் உறவினர்கள் தாக்கினர். இதை கண்டித்து மாநிலம் முழுவதும் அரசு டாக்டர்கள் 11-ந்தேதி முதல் போராட்டத்தில் இறங்கினர். இதற்கிடையே மம்தா பானர்ஜி இது பா.ஜனதா மற்றும் இடதுசாரிகளின் சதிதிட்டம் எனக் கூறினார். இதனையடுத்து கோபம் அடைந்துள்ள மருத்துவர்கள் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவர்களின் போராட்டம் 6 வது நாளாக நீடிக்கிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மம்தா பானர்ஜி மேற்கொண்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்தது.

மேற்குவங்க அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்கள் 100க்கும் மேற்பட்டோர் தங்கள் ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளனர். மருத்துவர்கள் போராட்டத்தினால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்எம்கே மருத்துவமனைக்கு இதய நோய் காரணமாக சாமுவேல் ஹக் என்பவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய சிகிச்சை தொடர்பாக எந்த ஒரு தகவலும் தெரியாமல் உறவினர்கள் பரிதவிக்கிறார்கள். அவருடைய சகோதரர் பேசுகையில், நாங்கள் கடந்த ஞாயிறு அன்று மருத்துவமனைக்கு வந்தோம். அப்போது நிலை சரியாக இருந்தது. அவசர நிலையில் நாங்கள் மருத்துவமனையில் ஹக்கை சேர்த்தோம். செவ்வாய் பரிசோதனை செய்யப்படும், ஆப்ரேஷனுக்கு நேரம் சொல்லப்படும் என மருத்துவர்கள் கூறினர், இப்போது நிலையோ மோசமாகியுள்ளது. மருத்துவர்கள் யாருமில்லை. எங்களால் இப்போது வீடும் திரும்ப முடியாது. நாளைவரை காத்திருக்க முடிவு செய்துள்ளோம், எனக் கூறியுள்ளார். இதற்கிடையே பரிசோதனை செய்வதற்கு பயிற்சி மருத்துவர்கள் யாருமில்லை எனக் கூறப்படுகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் இதுதான் நிலையாக இருக்கிறது. நோயாளிகள் தங்களுடைய வேதனைகளை தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com