ஜனசேனா கட்சி சட்டமன்ற குழு தலைவராக பவன் கல்யாண் தேர்வு


Pawan Kalyan elected as Janasena floor leader in Andhra Pradesh Assembly
x
தினத்தந்தி 11 Jun 2024 6:54 AM GMT (Updated: 11 Jun 2024 7:50 AM GMT)

நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் 21 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தின் 2-வது பெரிய கட்சியாக ஜனசேனா உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 175 சட்டசபை தொகுதிகளில் 164 தொகுதிகளிலும், 25 மக்களவைத் தொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெறும் 11 சட்டசபை மற்றும் 4 மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து ஆந்திர மாநிலம் புதிய முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு நாளை பதவி ஏற்க உள்ளார். பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், மற்றும் பல கட்சியை சார்ந்த தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.

இதனிடையே தேர்தல் வெற்றியை உறுதி செய்ததில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு பெரும் பங்குண்டு உள்ளதால் அவருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜனசேனா சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மங்களகிரியில் உள்ள ஜனசேனா கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூடி சட்டமன்ற கட்சி தலைவரை தேர்வு செய்தனர். இந்த கூட்டத்தில் ஜனசேனா கட்சியின் சட்டமன்ற தலைவராக பவன் கல்யாண் பெயரை மூத்த தலைவர் என்.மனோகர் முன்மொழிந்தார். இதற்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்ததால், ஜனசேனா கட்சி சட்டமன்ற குழு தலைவராக பவன் கல்யாண் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 21 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தின் 2-வது பெரிய கட்சியாக ஜனசேனா உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story
  • chat