ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் அமைதி போராட்டம்

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்க விவகாரத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கர்நாடக காங்கிரஸ் சார்பில் மவுன போராட்டம் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார்.
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் அமைதி போராட்டம்
Published on

பெங்களூரு:

பிரதமர் மோடி சார்ந்த சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட்டு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். இதற்கிடையே தண்டனையை நிறுத்தி வைக்குமாறு கோரிய ராகுல் காந்தியின் மனுவை சமீபத்தில் குஜராத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் கர்நாடக காங்கிரஸ் சார்பில் அமைதி போராட்டம் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த அமைதி போராட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மந்திரிகள் கே.எச்.முனியப்பா, ராமலிங்கரெட்டி, என்.எஸ்.போசராஜூ, பரமேஸ்வர், எச்.சி.மகாதேவப்பா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி இருந்தனர். கைகளில் மத்திய அரசை கண்டிக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இருந்தனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசு ஒழிக என்று முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என்று ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

காங்கிரசின் அமைதி போராட்டத்தால், சுதந்திர பூங்கா முன்பு ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அந்த சாலையின் ஒரு பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்த சாலையில் வரும் வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. காங்கிரசின் போராட்டம் காரணமாக சேஷாத்திரி ரோட்டில் வாகன நெரிசல் ஏற்பட்டது. அந்த சாலையில் வாகனங்கள் அனந்தராவ் சர்க்கிள் மேம்பாலம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com