கர்நாடகாவில் பெஜாவர் மடாதிபதி மரணம்: மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

கர்நாடகாவில் பெஜாவர் மடத்தின் மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் பெஜாவர் மடாதிபதி மரணம்: மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
Published on

மங்களூரு,

கர்நாடக மாநிலம் உடுப்பியில் பிரசித்தி பெற்ற பெஜாவர் மடத்தின் மடாதிபதியாக விஸ்வேசுவர தீர்த்த சுவாமி (வயது 88) இருந்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருடைய உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால் மடாதிபதியின் கடைசி ஆசைப்படி அவரை பெஜாவர் மடத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை மரணம் அடைந்தார்.

பெஜாவர் மடத்தில் இருந்து அவருடைய உடல், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டது. பெங்களூரு நேஷனல் கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு பிரதமர் மோடி சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அதன்பிறகு மாலை 6 மணியளவில் மடாதிபதியின் உடல் திறந்த வாகனத்தில் பெங்களூரு கத்ரிகுப்பே மெயின் ரோட்டில் உள்ள வித்யாபீடத்திற்கு எடுத்து வரப்பட்டது. அங்கு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும் மடாதிபதியின் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, குமாரசாமி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. மற்றும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மடாதிபதி மரணத்தையொட்டி அரசு சார்பில் இன்று (அதாவது நேற்று) முதல் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com