கோலார் தங்கவயலில் வெளுத்து வாங்கிய கனமழை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி

கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கோலார் தங்கவயலில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
கோலார் தங்கவயலில் வெளுத்து வாங்கிய கனமழை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி
Published on

கோலார் தங்கவயல்

கடும் வெயில்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போய்விட்டது. இதனால் மாநிலத்தில் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் பஞ்சமும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு மேலாக மாநிலத்தின் பல பகுதிகளில் அனல் பறக்கும் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் தென்கர்நாடகத்தின் வறட்சி மாவட்டமான கோலாரில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது.

வெயிலின் கொடூரத்தை தாங்க முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். மதிய நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடந்தனர்.

அத்துடன் கடந்த சில தினங்களாக 8 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் வெயிலின் உஷ்ணத்தால் புழுக்கம் தாங்க முடியாமல் அவதி அடைந்து வந்தனர். குளிர்ச்சியான பானங்களை பருகி, உடலில் உள்ள வெப்பத்தை தணித்து வந்தனர்.

வெளுத்து வாங்கிய கனமழை

இந்த நிலையில் நேற்று காலை முதலே கோலார் மாவட்டத்தில் தங்கவயல் உள்பட பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

குறிப்பாக கோலார் தங்கவயலில் சூரியனே தெரியாத அளவுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. சூரிய வெப்பத்தின் தாக்கமும் குறைந்திருந்தது.

இந்த நிலையில் மதியம் 1.30 மணி அளவில் தங்கவயலில் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. ராபர்ட்சன்பேட்டை, ஆண்டர்சன்பேட்டை, பி.இ.எம்.எல். நகர் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மாலை 5 மணி வரை கனமழை கொட்டி தீர்த்ததால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. பல பகுதி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதனால் வாகனங்கள் தண்ணீரில் மிதந்து சென்றன.

மக்கள் மகிழ்ச்சி

தங்கவயல் மட்டுமின்றி பங்காருபேட்டை, மாலூர், கோலார், முல்பாகல், சீனிவாசப்பூர் ஆகிய தாலுகாக்களிலும் பலத்த மழை கொட்டியது. கடுமையான வயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கனமழை பய்ததால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன், வெயிலின் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கனமழையால் சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com