

ஐதராபாத்,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளன. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்திலும் கொரோனா அதிகரித்து வருகிறது. தெலுங்கானாவில் நேற்று 4,826 கொரோனா பாதிப்புகளும், 32 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் தற்போது 62,797 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த, தெலங்கானா அரசும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. முதல்-அமைச்சர் சந்திரசேகர ராவின் பிரகதி பவனில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஊரடங்கு குறித்து தெலுங்கானா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இதன்படி, 12ந்தேதி (நாளை) முதல் 22ந்தேதி வரை 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. காலை 6 மணி முதல் 10 மணிவரை அனைத்து கடைகளும் இயங்கும் என்றும் மற்ற நேரங்களில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு நாளை காலை 10 மணி முதல் அமலுக்கு வரும். தெலுங்கானாவில் 10 நாள் ஊரடங்கை முன்னிட்டு ஐதராபாத் நகரில் சார்மினார் பகுதியருகே உள்ள சந்தைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து இன்று குவிந்தனர். அவர்களில் பலர் முக கவசங்களை முறையாக அணியாமலும் இருந்தனர். இதனால் அவர்களிடையே கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டது.