

புதுடெல்லி,
நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 2018 ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று, புத்தாண்டை கொண்டாடும் வகையில், தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் லட்சகணக்கானோர் திரண்டனர். இளைஞர்கள், பொதுமக்கள் என ஏறக்குறைய ஒரு லட்சம் பேர், இந்தியா கேட் பகுதியில் திரண்டதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்களின் ஹார்ன் சத்தமும் அதிக அளவில் இருந்தது. இது அங்குள்ள மக்களுக்கு கடும் அசவுகரியத்தை ஏற்படுத்தியது. இந்தியா கேட் பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் 50க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தியா கேட், நோக்கி செல்லும் அனைத்து சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
வாகன ஓட்டிகளுக்கு டெல்லி போக்குவரத்து காவல்துறை டுவிட்டரில் சில அறிவுரைகளை வெளியிட்டுள்ளது, டெல்லி போக்குவரத்து காவல்துறை டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா கேட் பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாதசாரிகள் கூடியுள்ளதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்தியா கேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்த இடம் இல்லை. எனவே இந்தியா கேட் பகுதியை தவிர்த்துவிட்டு வேறு பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.