மத்திய அரசு ரூ.15 லட்சம் செலுத்தும் என தபால் நிலையத்தில் குவிந்த பொதுமக்களால் பரபரப்பு

கேரளாவில் சேமிப்பு கணக்கில் மத்திய அரசு ரூ.15 லட்சம் செலுத்தும் என பரவிய வதந்தியை நம்பி தபால் நிலையத்தில் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு ரூ.15 லட்சம் செலுத்தும் என தபால் நிலையத்தில் குவிந்த பொதுமக்களால் பரபரப்பு
Published on

கடந்த 2014 பொதுத்தேர்தலின்போது, கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். கறுப்புப் பணத்தை மீட்பதற்காக மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதுவரையில் இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சனம் செய்து வருகின்றன.

இந்நிலையில், மூணாறு பகுதியில் தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கினால் அவர்கள் கணக்கில் மத்திய அரசு ரூ.15 லட்சம் முதலீடு செய்யும் என்று வதந்தி பரவியுள்ளது. இதனை நம்பி தபால் நிலையத்தில் பொதுமக்கள் குவியத் தொடங்கினார்கள். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்ததால் தபால் அலுவலக ஊழியர்கள் திணறினர். ரூ.15 லட்சம் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்பது வதந்தி என்று தபால் ஊழியர்கள் எடுத்துக் கூறினாலும் பொதுமக்கள் கலைந்து செல்லவில்லை. பல மணி நேரம் காத்திருந்து சேமிப்பு கணக்கை தொடங்கிய பிறகே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதுபற்றி தபால் ஊழியர்கூறுகையில், தபால் அலுவலகங்களில் பொதுமக்கள் ரூ.100 டெபாசிட் செய்து கணக்கு தொடங்கினால் கியூஆர் கோடு இடம் பெற்ற ஸ்மார்ட் கார்டு அவர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் ரூ.1 லட்சம் வரை தங்கள் கணக்கில் பொதுமக்கள் டெபாசிட் செய்து கொள்ளலாம். இதைதான் தவறுதலாக பொதுமக்கள் புரிந்துகொண்டு கணக்கு தொடங்கி உள்ளனர் எனக் கூறியுள்ளார்.

இதேபோன்று மூணாறு அருகே உள்ள தேவிக்குளம் தாசில்தார் அலுவலகத்தில் பெயரை பதிவு செய்தால் இலவச வீடு, நிலம் வழங்கப்படும் என்றும் வதந்தி பரவியது. இதை நம்பியும் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com