ஹாதியாவின் படிப்பிற்கு இடையூறு செய்ய முயற்சி, சுப்ரீம் கோர்ட்டு செல்வேன் தந்தை பரபரப்பு பேட்டி

ஹாதியாவின் படிப்பிற்கு இடையூறு செய்ய முயற்சி செய்கிறார்கள் என அவருடைய தந்தை குற்றம் சாட்டிஉள்ளார்.
ஹாதியாவின் படிப்பிற்கு இடையூறு செய்ய முயற்சி, சுப்ரீம் கோர்ட்டு செல்வேன் தந்தை பரபரப்பு பேட்டி
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் மதம் மாறி திருமணம் செய்த பெண் ஹாதியா சேலத்தில் தனது படிப்பை தொடர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

சேலம் ஹோமியோபதி கல்லூரியின் டீனை ஹாதியாவின் பாதுகாவலராக நியமிக்கிறோம் எனவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சேலம் கல்லூரியில் மீண்டும் சேர்ந்த ஹாதியா செய்தியாளர்களிடம் பேசுகையில் என்னால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை என்று பரபரப்பு பேட்டி அளித்தார். இந்நிலையில் அவருடைய தந்தை அசோகன், ஹாதியாவின் படிப்பிற்கு இடையூறு செய்ய முயற்சி செய்கிறார்கள், என்னுடைய மகளை காப்பாற்ற சுப்ரீம் கோர்ட்டு செல்வேன் என கூறிஉள்ளார்.

என்னுடைய மகள் படிப்பை முடிப்பதற்கே சேலம் கல்லூரிக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுப்பியது, அதற்கு இடையூறு செய்யப்பட்டால் குற்றமாகும் என கூறிஉள்ளார் அசோகன்.

சேலம் கல்லூரியில் ஹாதியா செய்தியாளர்களிடம் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் பெரும் அதிருப்தியை தெரிவித்து உள்ளார் அசோகன்.

என்னுடைய மகள் அவருடைய படிப்பை முடிப்பதற்கே கோர்ட்டு கல்லூரிக்கு அனுப்பி உள்ளது. ஆனால் என்னுடைய மகள் அதனை செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. சிலர் அவருடைய படிப்பிற்கு இடையூறு செய்ய முயற்சி செய்கிறார்கள். அவர் செய்தியாளர்களிடம் பேசுவதற்கு மிரட்டப்பட்டு உள்ளார். எனக்கு மிகவும் கவலையளிக்கிறது, என கூறிஉள்ளார். முன்னாள் ராணுவ வீரரான அசோகன், சிரியாவிற்கு செல்ல என்னுடைய மகள் மூளைசலைவை செய்யப்பட்டார், அவர் எந்த மதத்தை பின்பற்றுகிறார் என்பதில் எனக்கு எந்தஒரு பிரச்சனையும் கிடையாது எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

ஷபின் ஜகானுடன் அகிலாவிற்கு நடைபெற்ற திருமணத்தை கேரள மாநில ஐகோர்ட்டு ரத்து செய்து உள்ளது. ஷபின் ஜகான் ஹாதியாவை கல்லூரியில் சந்திக்கலாம் என்று செய்திகள் வெளியாகும் நிலையில், நான் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுப்பேன், என்னுடைய மகளை காப்பாற்ற சட்ட நடவடிக்கையையும் மேற்கொள்வேன், நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கையும் உள்ளது,என கூறிஉள்ளார் அசோகன். மேலும் ஜகானுக்கு எதிராக வலுவான தேசிய புலனாய்வு பிரிவு வழக்கு உள்ளதாக குற்றம் சாட்டிஉள்ள அசோகன், ஜகான் புலனாய்வு பிரிவு மற்றும் நீதித்துறையின் கண்காணிப்பின் கீழ் உள்ளார் எனவும் குறிப்பிட்டு உள்ளார். ஹாதியா சேலம் கல்லூரியின் டீன் செல்போன் மூலமாக ஷபின் ஜகானுடன் பேசினார் என செய்தி வெளியாகிய நிலையில் அசோகன் இப்பேட்டியை கொடுத்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com