

கொல்கத்தா,
மேற்கு வங்காள சட்டசபைக்கு வருகிற 27ந்தேதி முதல் ஏப்ரல் 29ந்தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே நேரடி போட்டிக்கான சூழல் உள்ள நிலையில் இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
மேற்கு வங்காள முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.
நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்பு மனுவை ஹல்டியா பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்று நேற்று முன்தினம் மம்தா தாக்கல் செய்தார்.
இதேபோன்று நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்காக இன்று காலை நந்திகிராமில் உள்ள கோவில் ஒன்றில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
இதன்பின்னர் நந்திகிராமில் உள்ள பொதுமக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, மக்களுடனான என்னுடைய உறவு பழமையானது. தேர்தல் வரும்பொழுது ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர்களை மம்தா பானர்ஜி நினைவுகூர்கிறார்.
அவரை மக்கள் வீழ்த்துவார்கள். நான் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறேன். நான் நந்திகிராமின் வாக்காளர்களில் ஒருவன் என கூறியுள்ளார்.