நாடு முழுவதும் அரசு துறைகளில் 62 லட்சம் காலி பணியிடங்கள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் 62 லட்சத்துக்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக பட்டியல் வெளியிட்டு காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதையாட்டி மத்திய அரசின் தோல்விகளை பட்டியலிட்டு காங்கிரஸ் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில் குறிப்பாக, நாடு முழுவதும் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, இவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் வெளியிட்டுள்ள அந்த காலியிட பட்டியலில் முக்கியமாக, மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9 லட்சத்துக்கு அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

மேலும் பொதுத்துறை வங்கிகளில் 2 லட்சம் காலியிடங்கள், 1.68 லட்சம் சுகாதார ஊழியர் பணியிடங்கள் மற்றும் 1.76 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதைப்போல ராணுவத்தில் 2.55 லட்சம் பணியிடங்களும், மத்திய ஆயுதப்படைகளில் 91,929 பணியிடங்களும், மாநில போலீஸ் துறையில் 5.31 லட்சம் பணியிடங்களும், பல்வேறு கோர்ட்டுகளில் 5 ஆயிரம் பணியிடங்களும் காலியாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் 30 லட்சத்துக்கு மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பட்டியலை வெளியிட்ட கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, இளைஞர்கள் பணிக்காக ஏங்குவதாகவும், ஆனால் அரசுகள் காலியிடங்களை நிரப்பவில்லை எனவும் குற்றம் சாட்டினார். அதேநேரம் மத்தியில் மோடி அரசு பதவியேற்ற இந்த 8 ஆண்டுகளில் நாடு முழுவதும் மத மோதல்கள் அதிகரித்து இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அந்தவகையில் கடந்த 2016-2020-ம் ஆண்டு காலத்தில் 3,400 மதக்கலவரங்கள் நடந்திருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், ஆனால் 8 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியில் நடந்துள்ள மதக்கலவரங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என்றும் கூறினார்.

கடந்த 2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், தலித் பிரிவினர் மீதான வன்முறை 12 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தெரிவித்த அவர், கடந்த 8 ஆண்டுகளில் காஷ்மீரில் 548 பாதுகாப்பு படையினர், 324 பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும், இந்திய-சீன எல்லை தொடர்ந்து பதற்றத்தில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com