

வேதாந்தா நிறுவனம் மனு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க வேதாந்தா நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் 28-ந்தேதி அனுமதி வழங்கி உத்தரவிட்டது. ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க வழங்கப்பட்ட இந்த அனுமதி உத்தரவு ஜூலை 31-ந்தேதி வரை அமலில் இருக்கும். பின்னர் நிலவும் பேரிடர் சூழலைப் பொறுத்து முடிவெடுக்கப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அளித்த அனுமதியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க கோரி வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் புதிய இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளது.
நாட்டின் நலன் கருதி...
அந்த மனுவில், மருத்துவ நிபுணர்களின் கருத்துகளின்படி கொரோனா பாதிப்பின் 3-வது அலையின் விளிம்பில் நாடு உள்ளது. மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு முக்கியமாக உள்ள ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கவேண்டியுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் இறப்புகளைத் தவிர்க்க, நாடு முழுவதும் போதுமான ஆக்சிஜன் உற்பத்தியை தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும். எனவே நாட்டின் நலன் கருதி, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அளித்த அனுமதியை மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும். இந்த புதிய இடைக்கால மனுவை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரமாக விசாரிக்க கோரிக்கை
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே, இடைக்கால மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், தமிழ்நாட்டில் போதுமான ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதால் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டியதில்லை என தெரிவித்தார்.
ஆகஸ்டு 6-ந்தேதி விசாரணை
அதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அளித்த அனுமதியை மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கக் கோரும் வேதாந்தாவின் இடைக்கால மனு மீதான விசாரணை ஆகஸ்டு 6-ந்தேதி நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.