

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. நாடுமுழுவதும் போடப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்று 8.70 கோடியைக் கடந்தது.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்களை அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையம் அமைத்து ஏப்ரல் 11-ஆம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசி செலுத்த தகுதியான 100க்கும் அதிகமான பயனாளிகளை கொண்ட அலுவலகம் அருகில் உள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்தை அணுக வேண்டும். மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த வயது வரம்பில் எவ்வித மாற்றமுமில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.