கேரளாவில் உடற்பயிற்சி கூடம், உள் விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி - முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் புதிய தளர்வாக உடற்பயிற்சி கூடம், உள் விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உடற்பயிற்சி கூடம், உள் விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி - முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் கொரோனா குறித்தான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பினராயி விஜயன் கூறியதாவது:-

மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதத்தின் அடிப்படையில் உடற்பயிற்சி கூடங்கள், உள் விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் ஏ பிரிவிலும், 5 முதல் 10 வரை உள்ள பகுதிகள் பி பிரிவிலும், 10 முதல் 15 வரையுள்ள பகுதிகள் சி பிரிவிலும், 15 சதவீதத்திற்கும் மேல் உள்ள பகுதிகள் டி பிரிவிலும் சேர்க்கப்படும். ஏ மற்றும் பி பிரிவுக்கு உட்படும் பகுதிகளில் அரசு அலுவலகங்களில் அனைத்து ஊழியர்களும் பணியாற்றலாம். சி பிரிவுக்கு உட்படும் பகுதிகளில் அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணி செய்யலாம். டி பிரிவுக்கு உட்படும் பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

ஏ, பி பிரிவுகளுக்கு உட்படுத்தப்படும் இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள் உள் விளையாட்டு அரங்குகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்டு திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com