விமானத்தில் பயணிகளுக்கு உணவு வழங்க அனுமதி; முக கவசம் அணியாதவர்களுக்கு தடை விதிக்க உத்தரவு

விமானத்தில் பயணிகளுக்கு மீண்டும் உணவு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், முக கவசம் அணிய மறுக்கும் பயணிகளை விமானத்தில் பறக்க தடை செய்யப்பட்டோர் பட்டியலில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணிகளுக்கு உணவு வழங்க அனுமதி; முக கவசம் அணியாதவர்களுக்கு தடை விதிக்க உத்தரவு
Published on

புதுடெல்லி,

கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. கடந்த மே 25-ந் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கியது. ஆனால், சர்வதேச விமான சேவை தொடங்கப்படவில்லை.

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்துவர வந்தே பாரத் திட்டத்தின்கீழ் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த மே 25-ந் தேதியில் இருந்து உள்நாட்டு விமானங்களில் சாப்பாடு வழங்க அனுமதிக்கப்படவில்லை. சர்வதேச விமான சேவைகளில், முன்கூட்டியே பொட்டலம் கட்டப்பட்ட ஆறிய சாப்பாடும், நொறுக்குத்தீனிகளும் அனுமதிக்கப்பட்டன.

இந்நிலையில், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உள்நாட்டு விமானங்களில், பயண நேரத்தை பொறுத்து, நொறுக்குத்தீனி பொட்டலங்கள் அல்லது சாப்பாடு பொட்டலங்கள் அல்லது குளிர்பானங்களை வழங்கலாம். சர்வதேச விமான சேவையின்போது, சூடான சாப்பாடு, குறிப்பிட்ட அளவு குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கலாம்.

விமானங்களில் சாப்பாடு, குளிர்பானம் வழங்கும்போது ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய சாப்பாட்டு தட்டு, ஸ்பூன் ஆகியவற்றை வழங்க வேண்டும். ஒவ்வொரு தடவை சாப்பாடு, குளிர்பானம் வழங்கும்போதும் ஊழியர்கள் புதிய கையுறைகளை பயன்படுத்த வேண்டும்.

விமானம் புறப்படத் தொடங்கியவுடன், பயணிகளின் பொழுதுபோக்குக்காக, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய இயர்போன் அல்லது சுத்தப்படுத்தப்பட்ட ஹெட்போன் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

விமான பயணத்தின்போது, எந்த பயணியாவது முக கவசம் அணிய மறுத்தால், அவரை விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் விமான நிறுவனங்கள் சேர்க்க வேண்டும். இதற்காக புதிய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக விதிமுறைப்படி, இதற்கான நடவடிக்கை எடுக்க விமான ஊழியர்களுக்கும், விமான நிறுவனத்துக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com