தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை பற்றி வாட்ஸ்ஆப், மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஷியாம் திவான், ‘பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதில் வாட்ஸ்ஆப் நிறுவனம் பாகுபாடு காட்டுகிறது’ என வாதிட்டார்.
தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை பற்றி வாட்ஸ்ஆப், மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
Published on

புதுடெல்லி,

வாட்ஸ்ஆப் நிறுவனம், புதிய தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கையை (பிரைவஸி கொள்கை) செயல்படுத்த தடை கோரி டெல்லியை சேர்ந்த கர்மான்யா சிங் ஷரீன் தாக்கல் செய்த இடைக்கால மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று நடைபெற்றது.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஷியாம் திவான், பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதில் வாட்ஸ்ஆப் நிறுவனம் பாகுபாடு காட்டுகிறது என வாதிட்டார்.

அப்போது வாட்ஸ்ஆப், பேஸ்புக் நிறுவனங்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் கபில்சிபல், அர்விந்த் தத்தர் ஆஜராகி, மக்களின் தகவல்களை பாதுகாக்க ஐரோப்பாவில் தனிச் சட்டம் உள்ளது. அதுபோன்ற சட்டம் இந்தியாவில் இல்லை. இந்தியாவிலும் அதுபோன்ற சட்டத்தை இயற்றினால், அது கடைப்பிடிக்கப்படும். புதிய 'பிரைவஸி' கொள்கை ஐரோப்பாவை தவிர உலகம் முழுவதும் அமலாக்கப்படும் என வாதிட்டனர்.

இதற்கு நீதிபதிகள், மனுதாரர் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களை ஏற்கிறோம், உங்கள் நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மதிப்பை விட, ஒவ்வொருவரின் தனிப்பட்ட தகவல்களின் மதிப்பு அதிகம். மக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது எங்களின் கடமை என தெரிவித்து, இந்த மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசு, வாட்ஸ்ஆப், பேஸ்புக் நிறுவனங்களுக்கு உத்தரவிடுகிறோம் என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com